கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு; மேற்கு வங்காள அரசுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்
|பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்கு வங்காள அரசுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி மேற்கு வங்காள மாநில அரசுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-
"மிகுந்த வலியுடனுடம், வேதனையுடனும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒரு தனிநபருக்கு எதிராக நடந்த குற்றம் மட்டுமல்ல, நம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதலாகும்.
இது நமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளை பிரதிபலிப்பதாகவும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் இதுபோன்ற ஒரு கொடூரம் நிகழலாம் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவ சமூகம் ஏற்கனவே சவாலான சூழ்நிலையில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது, அவர்கள் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறையினர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என மேற்கு வங்காள அரசு மற்றும் சி.பி.ஐ.யிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் மேற்கு வங்காளத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக அரசாங்கம் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.