ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை.. உடலை 3 துண்டாக வெட்டிய கொடூரம்: மைத்துனர் வெறிச்செயல்
|கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், தினமும் தனது மைத்துனருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கொல்கத்தா:
கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் உள்ள ரீஜண்ட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசுல்தங்கா கிராமத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பசுல் தங்கா கிராமத்தைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் (வயது 35) என்பதும், கொலை செய்யப்பட்டது அவரது சகோதரரின் மனைவி என்பதும் தெரியவந்தது. ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி காவல்துறை துணை ஆணையாளர் பிதிஷா கலிதா கூறியதாவது:-
கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், வீட்டு வேலை செய்து பிழைத்துள்ளார். லஸ்கர் கட்டுமான தொழிலாளி ஆவார். அவர் வேலை செய்த பகுதியில்தான் அந்த பெண்ணும் வேலை செய்துள்ளார். எனவே, தினமும் லஸ்கருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக பயணித்தபோது அந்த பெண் மீது லஸ்கருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பெண்ணிடம் கூறியபோது அவர் ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்ததால் லஸ்கருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலையில் அந்த பெண் வேலை முடிந்து புறப்பட்டபோது, தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 3 துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.