< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா பலாத்கார வழக்கு; இங்கிலாந்தில் கண்டன கடிதம் வெளியிட்ட இந்திய மருத்துவர்கள்

கோப்பு படம்

தேசிய செய்திகள்

கொல்கத்தா பலாத்கார வழக்கு; இங்கிலாந்தில் கண்டன கடிதம் வெளியிட்ட இந்திய மருத்துவர்கள்

தினத்தந்தி
|
17 Aug 2024 2:30 PM GMT

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார விவகாரம், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்புக்கான அறிகுறியாக காணப்படுகிறது என இந்திய மருத்துவர்கள் வெளியிட்ட கடிதம் தெரிவிக்கின்றது.

லண்டன்,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், போலீசாருக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த, சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழுவினர் கண்டன கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில், பெண் டாக்டர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு பதில் நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்காள அரசின் செயலற்ற தன்மையையும் கண்டிக்கிறோம் என தெரிவித்து உள்ளது.

இந்த கடிதம் வெளியிடப்படுவதற்கு முன், இந்தியாவில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அவர்கள், லண்டனில் உள்ள இந்தியா ஹவுசுக்கு வெளியே மற்றும் எடின்பர்க் மற்றும் லீட்ஸ் உள்ளிட்ட நகரங்களில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்புக்கான அறிகுறியாக இந்த சம்பவம் காணப்படுவதுடன், மக்களிடம் அரசு அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதற்கான அறிகுறியாகவும் உள்ளது என அந்த கடிதம் தெரிவிக்கின்றது.

இந்த பெண் டாக்டரின் மரணம் ஆனது, நாட்டில் அனைத்து பணியிடங்களிலும் பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிபுரியும் இடங்களிலேயே புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்துவது போன்றவற்றுக்கான அவசர தேவை ஏற்பட்டுள்ளது என அடையாளம் காட்டியுள்ளது என்றும் அந்த கடிதம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்