80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
|கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில், எங்களுடைய கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பட்ஜெட் உரையை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறார். அவரது உரையின்படி, நாட்டில் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. எங்களுடைய அரசில் இளைஞர்கள் பெண்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனினும், இந்தியாவின் வளர்ச்சி பிரகாசத்துடன் காணப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது என்றார்.
4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாடு, சிறு, குறு நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறோம்.
கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அரசின் இந்த திட்டத்தினால், 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.