கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது
|விபத்தில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.