கேரளா: மேடையில் இருந்து கீழே விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ. - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
|நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் எலும்பு முறிவு, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. சுயநினைவை இழந்துள்ள உமா தாமஸுக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவர்களுடன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தொழில்துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், மேடையில் நிற்பதற்கு போதுமான இடம் ஒதுக்காததே உமா தாமஸ் கீழே விழுவதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.