லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது - சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
|லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். அதேநேரம், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்பட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, "லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாதபோது சோதனைக்கு அனுப்பினோம். 2-வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது" என ஆந்திர அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்-மந்திரி என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? எஸ்ஐடி குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?
மேலும், திருப்பதி லட்டு பிரசாதத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை. திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும், என நீதிபதிகள் கூறினர்.