கைவிட்ட பா.ஜனதா: கட்சியில் சேர்ந்த மறுநாள் சீட் வழங்கிய காங்கிரஸ்
|துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில், யோகேஷ்வர் காங்கிரசில் இணைந்தார்
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகள் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகியவை ஆகும். அந்த 3 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மனுத்தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சென்னபட்டணா தொகுதி ஒதுக்கப்பட்டது. மற்ற 2 தொகுதிகளுக்கும் பா.ஜனதா வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
சென்னபட்டணா தொகுதியில் தனக்கு டிக்கெட் வழங்கியே தீர வேண்டும் என்று முன்னாள் மந்திரி யோகேஷ்வர் பா.ஜனதா தலைவர்களிடம் பிடிவாதமாக கூறினார். ஆனால் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிட்டதால் பா.ஜனதா தலைவர்கள் கைவிரித்துவிட்டனர்.
யோகேஷ்வருக்கு அந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அதனால் அவர் கட்சியை விட்டு விலகினால் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ஜனதா தளம்(எஸ்) தலைவரான மத்திய மந்திரி குமாரசாமி, தங்கள் கட்சி சின்னத்தில் யோகேஷ்வர் போட்டியிட விரும்பினால் வாய்ப்பு வழங்க தயார் என்று கூறினார். அதை ஏற்க மறுத்த யோகேஷ்வர், தான் பா.ஜனதா சார்பில் மட்டுமே போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த குமாரசாமி, நான் என்னால் முடிந்த அளவுக்கு பா.ஜனதாவுக்கு வளைந்து கொடுத்துவிட்டேன், இனியும் வளைந்து கொடுக்க முடியாது என்று பகிரங்கமாக கூறினார். இன்னொரு புறம் யோகேஷ்வர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் சென்னபட்டணாவில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் காங்கிரசில் சேர ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக முதல்-மந்திரி சித்தராமையாவை யோகேஷ்வர் பெங்களூருவில் உள்ள அவரது காவேரி பங்களாவில் நேரில் சந்தித்து பேசினார். இதன் மூலம் அவர் காங்கிரசில் இணைவது உறுதியானது. சித்தராமையாவின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார் அவரை வரவேற்றார். அவரது முன்னிலையில் யோகேஷ்வர் காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் இணைந்த யோகேஷ்வர் அக்கட்சி சார்பில் சென்னப் பட்டணாவில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.