< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பஸ்களில் 15 சதவீத கட்டண உயர்வு
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பஸ்களில் 15 சதவீத கட்டண உயர்வு

தினத்தந்தி
|
3 Jan 2025 12:23 AM IST

பஸ் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 4 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகம், வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகம் என 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போக்குவரத்து கழகங்கள் மூலம் கர்நாடகத்தில் 24 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெங்களூருவில் மட்டும் 6 ஆயிரத்து 500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த பஸ்களின் கட்டணம் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டீசல் விலை பல முறை உயர்ந்துவிட்டது. அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு அந்த போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் மக்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்பதால் எந்த கட்சியின் அரசும் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவில்லை.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கர்நாடக அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்க சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி செலவாகி வருகிறது.

இதற்கிடையே போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தங்களின் சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 31-ந் தேதி முதல் இந்த போராட்டத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே 4 போக்குவரத்து கழகங்களும், பஸ் கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயா்த்தியே ஆக வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தன. அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் 4 போக்குவரத்து கழகங்களும் பஸ் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்திக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பஸ் கட்டணம் ரூ.2 உயர்கிறது. அதன்படி பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணம் முதல் 2 கிலோ மீட்டர் வரை பொருந்தும்.

இந்த பஸ் கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமலுக்கு வருகிறது. புத்தாண்டு பிறந்த மறுநாளே கர்நாடக அரசு மக்களுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகள் அரசை கண்டித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.

மேலும் செய்திகள்