கன்னத்தில் அறைந்த விவகாரம்: பெண் காவலரை பாராட்டியவர்களை சாடிய கங்கனா
|கங்கனாவை தாக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சண்டிகார்,
நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்றார். இதையடுத்து டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரனாவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2020ம் ஆண்டு விவசாய சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய தனது தாய் உள்பட அனைவரையும் கங்கனா அவமானபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததால் கங்கனாவை அறைந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேவேளை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரபல பாடகர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு தான் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்
இந்த நிலையில், தன்னை கன்னத்தில் அறைந்த பெண் காவலரை பாராட்டுபவர்களை கங்கனா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"ஒவ்வொரு பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி, கொலையாளி, திருடன் என அனைவரும் குற்றத்தை செய்வதற்கு உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது நிதி சார்ந்த காரணங்கள் இருக்கும். எந்தக் குற்றமும் ஒரு காரணமின்றி நடக்காது. இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும். இவ்வளவு வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றைச் சுமக்காதீர்கள், தயவுசெய்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.