< Back
தேசிய செய்திகள்
மம்தாவின் வேண்டுகோளை நிராகரித்த ஜூனியர் டாக்டர்கள் : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
தேசிய செய்திகள்

மம்தாவின் வேண்டுகோளை நிராகரித்த ஜூனியர் டாக்டர்கள் : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Aug 2024 8:30 PM IST

கொல்கத்தாவில் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ.(மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பயிற்சி பெண் டாக்டர் படுகொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷை சுகாதாரப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதும் அதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷியம்பஜார் பகுதியில் ஜூனியர் டாக்டர்கள் பேரணியை நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், எங்கள் போராட்டத்திற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவளிப்பதை வரவேற்கிறோம். நாங்கள் பணிக்குத் திரும்ப விரும்புகிறோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கைகள் ஏற்காத வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றார்.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். போராட்டத்தை கைவிட்டு, டாக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும். போராடிவரும் டாக்டர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பேரணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும் செய்திகள்