< Back
தேசிய செய்திகள்
வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக்கொண்டது நாடாளுமன்ற கூட்டுக்குழு
தேசிய செய்திகள்

வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக்கொண்டது நாடாளுமன்ற கூட்டுக்குழு

தினத்தந்தி
|
29 Jan 2025 2:30 PM IST

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

புதுடெல்லி:

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படடது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 16 எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகள் சார்பில் 10 எம்.பி.க்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

கூட்டுக்குழு உறுப்பினர்கள், மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். மசோதாவில் பல்வேறு திருத்தங்களுக்கு இரு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த ஆலோசனை மற்றும் விவாதத்தின் நிறைவாக, நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மசோதா இறுதி செய்யப்பட்டது.

திருத்தங்கள் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகள் தரப்பில் கொண்டு வந்த திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

திருத்தங்கள் தொடர்பான அறிக்கையும், திருத்தங்களின் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதாவும் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அறிக்கை மற்றும் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகவலை கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.

வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் முஸ்லிம்களின் மத விஷயங்களில் அரசு தலையிட அனுமதிப்பதன் மூலம் வக்பு வாரியத்தை அழிக்கும் என்றும் குற்றம் சாட்டினர்.

ஆனால், கூட்டுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல திருத்தங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல கவலைகளையும் நிவர்த்தி செய்துள்ளதாக கூட்டுக்குழு தலைவர் கூறி உள்ளார். மசோதா சட்டமானதும் வக்பு வாரியம் தனது கடமைகளை வெளிப்படையாகவும் திறம்படவும் நிறைவேற்ற உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்