பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையின்மை அதிகரிப்பு - காங்கிரஸ் சாடல்
|இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாக சிட்டிகுரூப் எனப்படும் சர்வதேச வங்கி ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாக சிட்டிகுரூப் எனப்படும் சர்வதேச வங்கி ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும் போதிய வேலை இருக்காது என்றும், இது வேலையில்லா வளர்ச்சி என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறது.இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் வேலையின்மை நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி குறைந்தது கடந்த 5 ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறது. துக்ளக் நிர்வாக பணமதிப்பு நீக்கம், அவசர கோல ஜி.எஸ்.டி. அமல், சீன இறக்குமதி அதிகரிப்பு ஆகியவற்றால் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையை சீரழித்ததால் வேலையின்மை நெருக்கடி தீவிரமடைந்தது.
பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கை பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. உயிரியல் அடிப்படையில் பிறக்காத பிரதமர் நாட்டின் வேலையில்லா திண்டாட்ட விகிதத்தை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தி விட்டார். பட்டதாரிகள் மத்தியிலான வேலையில்லா திண்டாட்ட விகிதம் 42 சதவீதமாக உள்ளது.
உயிரியல் அடிப்படையில் பிறக்காத பிரதமரின் அரசின் கீழ் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி கூட நமது இளைஞர்களுக்கு போதுமான வேலைகளை உருவாக்காது. நாம் சராசரியாக 5.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளோம். தோல்வியடைந்த மோடி பொருளாதாரம்தான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அடிப்படைக் காரணம்.
10 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை கூட நமது படித்த இளைஞர்கள் பெறுவதற்கு அரசு தடையாக உள்ளது. நாட்டின் உழைக்கும் வர்க்கத்தில் வெறும் 21 சதவீதத்தினர் மட்டுமே மாத ஊதியதாரர்களாக உள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய 24 சதவீதத்தை விட குறைவாகும்.
கிராமப்புற மக்களின் உண்மையான ஊதியம் ஆண்டுக்கு 1 முதல் 1.5 சதவீதம் வரை சரிகிறது. கிராமப்புற இந்தியர்களை மோடி ஏழைகளாக மாற்றி வருகிறார். மோடி அரசின் மிகைப்படுத்தப்பட்ட திட்டங்கள் களத்தில் எந்த பலனையும் கொடுக்கவில்லை எனக்கூறியுள்ள சிட்டிகுரூப் அறிக்கை, அவற்றில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைத்து இருக்கிறது.
திறன் இந்தியா திட்டம் முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும், அதன் மூலம் 4.4 சதவீதம் இளைஞர்கள் மட்டுமே எந்தவொரு பயிற்சியும் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
இதைப்போல முத்ரா மற்றும் சுயநிதி திட்டங்களும் சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்க தவறிவிட்டன. கட்டுமான துறையில் அதிக வேலைகளை உருவாக்க வேண்டும். அரசு பெரிய அளவிலான சமூக வீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.