< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டி: முதல்-மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டி: முதல்-மந்திரி தகவல்

தினத்தந்தி
|
15 Oct 2024 1:57 PM IST

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதால் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதில் நம்பிக்கை இல்லை என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மத்திய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எங்கள் தேர்தல் தயார்நிலை மதிப்பாய்வு செய்யப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 81 தொகுதிகளிலும் போட்டியிடும்.

எதிர்க்கட்சியான பா.ஜ.க.வை போலல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதால் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதில் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

'இரட்டை இயந்திர பா.ஜ.க. அரசாங்கம் இருந்தபோதிலும் 2019-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததால், இந்த முறையும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என சோரனின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமான கல்பனா சோரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்