< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

தினத்தந்தி
|
4 July 2024 5:27 PM IST

ஜார்க்கண்டின் முதல்-மந்திரியாக மூன்றாவது முறையாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தநிலையில், அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த 28-ம்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். இது கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் முதல்-மந்திரியாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி எம் எல் ஏ க்களின் கூட்டம் நேற்று சம்பாய் சோரன் வீட்டில் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர், மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் ஹேமந்த் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இதன்படி ஜார்க்கண்டின் 13வது முதல்-மந்திரியாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்