ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
|ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதில் ராணா முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா (வயது 59) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பரிதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். இவர் மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங்கின் சகோதரர் ஆவார். ராணாவின் உடல் ஜம்முவுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான தேவேந்தர் சிங் ராணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'தேவேந்திர சிங் ராணாவின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக விடாமுயற்சியுடன் பணியாற்றியவர் அவர். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேவேந்தர் சிங் ராணா, ஜம்மு பிராந்தியத்தின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், தேசிய மாநாட்டு கட்சியின் முன்னணி முகமாகவும் இருந்தார். அவர் 2021-ல் பா.ஜ.க.வில் சேருவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நக்ரோடா தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.