இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிவு
|இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிந்துள்ளது.
டெல்லி,
நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி வளர்ச்சி) விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். குறிப்பாக கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் குறைந்துள்ளது.
வேளாண் துறை வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு ஜிடிபி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 2.0 சதவீதமாக குறைந்துள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் (ஜிடிபி) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, உற்பத்தி துறையில் நடப்பு காலாண்டு வளர்ச்சி 7.0 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டில் இருந்த 6.2 சதவீதத்தை விட 0.8 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி சரிவை சந்தித்துள்ள நிலையில் இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சத்தில் உள்ள இந்திய பங்குச்சந்தை ஜிடிபி சரிவு தொடர்பான புள்ளிவிவரத்தால் திங்கட்கிழமை சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.