< Back
தேசிய செய்திகள்
படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் விரைவில்... மத்திய மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் விரைவில்... மத்திய மந்திரி தகவல்

தினத்தந்தி
|
16 Jun 2024 12:59 AM IST

ரெயிலின் உட்புறம், வெளிப்புறம், ரெயிலின் முகப்பு பகுதி, இருக்கைகள், உட்புற விளக்குகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை அழகுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

புதுடெல்லி,

நாட்டில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன், புது அனுபவம் தரும் வகையில், உள்நாட்டிலேயே தயாரான வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை கட்டமைக்கும் பணியானது நிறைவு கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 மாதங்களில், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும். ரெயிலை உருவாக்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதற்காக பெங்களூருவில் உள்ள ரெயில் பிரிவில் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் உள்பட பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயிலானது, பயணிகளுக்கு, எளிய முறையில் இயங்குவதற்கான வசதிகளை வழங்கும். சர்வதேச தரநிலைகளுடனான பல்வேறு வசதிகளுடன் ரெயில் வடிவமைக்கப்பட்டு வருங்காலத்தில் செயல்பாட்டிற்கு வரும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், கடுமையான பாதுகாப்பு தரநிலைகளுடன் ரெயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரெயிலின் உட்புறம், வெளிப்புறம், ரெயிலின் முகப்பு பகுதி, இருக்கைகள், உட்புற விளக்குகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை அழகுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்த ரெயிலானது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நீண்டதொலைவு பயணத்திற்கு ஏற்ற வகையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இந்த ரெயில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்