இந்தியா மிகவும் ஆபத்தான பொருளாதார நிலையில் உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
|இந்தியா மிகவும் ஆபத்தான, கடினமான பொருளாதார நிலையில் இருக்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
30 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி பயணம், நுகர்வு வளர்ச்சியில் ஒன்றாக இருந்தது. கோடிக்கணக்கான குடும்பங்கள், ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வகுப்பில் நுழைந்தன. பொருட்களையும், சொத்துகளையும் வாங்கும் நிலைக்கு முன்னேறின. இது, செழிப்பான பொருளாதாரத்தின் அறிகுறி.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நுகர்வு பயணம், பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் நடுத்தர வகுப்பு சுருங்கி வருவதாக முன்னணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். சம்பள தேக்கம், அதிக பணவீக்கம், சமத்துவம் இன்மை ஆகியவைதான் அதற்கான காரணங்கள்.
தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்க முடிந்ததை விட தற்போது குறைவாகவே வாங்க முடிவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூட தெரிவிக்கின்றன. குடும்பங்களுக்கு கூடுதல் வருவாய் குறைந்து விட்டதால், அவர்களால் பொருட்களை வாங்க செலவழிக்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், அதானி குழுமம் உள்பட 5 பெரிய தொழில் குழுமங்கள்தான் பெரிதாக உருவெடுத்ததாக ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு, ஒரு சாமானியன் ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கினால், தொழிற்சாலையின் உரிமையாளருக்கு 18 சதவீதத்தை செலுத்தி வந்தான். ஆனால், இப்போது அதே உரிமையாளருக்கு 36 சதவீதம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் நிலைப்பாடுதான், விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணம். இந்த விலை உயர்வால், சாமானியர்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது.
கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு நாட்டின் கிராமப்புற மக்களும், ஏழைகளும் கைவிடப்பட்டனர். அதனால் சமத்துவம் இன்மை நிலவி வருகிறது. கிராமங்களில் இருசக்கர வாகனங்கள் விற்பனை, 2018-ம் ஆண்டில் இருந்ததை விட குறைவாக இருக்கிறது. தங்களது தயாரிப்புகளின் விற்பனையில் போதிய வளர்ச்சி இல்லாவிட்டால், இந்தியாவின் தனியார் துறை, புதிய தயாரிப்புகளில் முதலீடு செய்யாது.
இந்தியா மிகவும் ஆபத்தான, கடினமான பொருளாதார நிலையில் இருக்கிறது. சம்பள தேக்கம், பணவீக்கம், சமத்துவம் இன்மை ஆகியவை அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்ல. அவை இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியை அரித்துவிடும். இப்போதாவது தீவிர கவனம் செலுத்தாவிட்டால், இந்த தடைக்கற்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.