சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் தகவல்
|சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சிரியாவில் அரசுக்கு எதிராக உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிபர் பஷார் அல்-ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடிப்பதால் நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அங்கு வாழும் இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மத்திய அரசு தரவுகளின்படி சிரியாவில் சுமார் 90 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 14 பேர் பல்வேறு ஐ.நா. நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.