< Back
தங்கம்
இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை - தலைமைப் பொருளாதார ஆலோசகர்
தங்கம்

இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

தினத்தந்தி
|
22 July 2024 4:20 PM IST

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக தலைமைப்பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.

476 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், 'நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன' உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்.

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை. பணத்தை முதலீடு செய்கின்றனர். தனியார் முதலீடுகள் 2021-ம் ஆண்டுக்கு பிறகு உயர்ந்து வருகிறது. பருவமழை பெய்து வருவதால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்