கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற சீனா: ரோந்து பணியை தொடங்கிய இந்தியா
|கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற்ற நிலையில் இந்தியா ரோந்து பணியை தொடங்கியுள்ளது.
லடாக்,
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய, சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.
இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் இருந்து படைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தன.
இதனிடையே, பல கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றன.
இந்நிலையில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம் இன்று ரோந்து பணியை தொடங்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கிய 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமுன் இருந்த நிலையை அடிப்படையாக கொண்டு இந்திய ராணுவம் டெம்சோக் பகுதியில் இன்று ரோந்து பணியை தொடங்கியுள்ளது.
அதேபோல், டெப்சாங் பகுதியிலும் 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலை அடிப்படையில் இந்திய ராணுவம் விரைவில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. டெம்சோக் பகுதியில் இருந்து குவிக்கப்பட்டிருந்த படை வீரர்களை சீனாவும் திரும்பப்பெற்றுள்ளது. இதையடுத்து, 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலையை அடிப்படையாக கொண்டு டெக்சோக் பகுதியில் சீனாவும் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் 4 ஆண்டுகளுக்கு மேலாக லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வழக்கமான ரோந்து பணியை இருநாடுகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.