
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை - மத்திய மந்திரி ராம் மோகன்

இந்தியாவில் தற்போது 800 விமானங்கள் உள்ள நிலையில் மேலும் 1,700 விமானங்களை வாங்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
புதுடெல்லி,
தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும் ஆஸ்திரியாவின் டைமன்ட் விமான நிறுவனங்களின் கூட்டு அமைப்பான சக்தி விமான நிறுவனம் சார்பில் 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடு பேசியதாவது:
இந்தியாவில் தற்போது 800-க்கும் அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 1,700 விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதனால், விமானத் துறை மிகப் பெரிய அளவில் விரிவடைய உள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் 6,000 முதல் 7,000 விமானிகள் மட்டுமே உள்ளனர். எனவே, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர். உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றார்.