"2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு" - சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு
|உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11-வது முறையாக பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
"சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காகப் பலர் உழைத்து வருகின்றனர்.
வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.
இந்தியாவை வல்லரசாக்கும் கனவை 2047க்குள் நிறைவேற்ற வேண்டும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். "
இவ்வாறு அவர் பேசினார்.
Live Updates
- 15 Aug 2024 8:52 AM IST
இந்தியாவிற்கு இது பொற்காலம் - பிரதமர் மோடி
இந்திய இளைஞர்கள் இப்போது மெதுவாக நடக்க விரும்பவில்லை. துள்ளிக் குதித்து, புதிய இலக்குகளை அடையும் மனநிலையில் உள்ளனர். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று கூற விரும்புகிறேன். உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இது பொற்காலம்.
- 15 Aug 2024 8:40 AM IST
* இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன;
* வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது