இஸ்ரேல், லெபனானின் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு
|இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவை போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி,
பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
இந்த சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதன்பின்பு. ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கடந்த அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு உள்ளார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவு பிராந்தியத்தில் தீவிரத்தை குறைக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும்"இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. விரிவாக்கம், கட்டுப்பாடு மற்றும் உரையாடல் மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்புவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த முன்னேற்றங்கள் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தங்களது தனித்தனி உரைகளில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவை போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.