டிஜிட்டல் உலகில் இந்தியா மிகப்பெரிய ஆய்வகமாக மாறியுள்ளது - நிதி ஆயோக் தலைவர் பேச்சு
|இந்தியாவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைவர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
ஐதராபாத்,
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம், ஐதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தகப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அதில் அவர் பேசும்போது, 'இன்று நம்மிடம் 1,200 பல்கலைக்கழகங்களும், 4 கோடிக்கு அதிகமான மாணவர்களும் உள்ளனர். ஆனால் 29 சதவீத மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக அமைப்புக்குள் இருக்கின்றனர். உண்மையில் 50 சதவீதத்தினராவது கல்லூரிகளில் சேர வேண்டும். அதற்கு நாம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்' என தெரிவித்தார்.
அந்தவகையில் இந்தியாவுக்கு 2,500 பல்கலைக்கழகங்கள் தேவை என்று கூறிய சுப்ரமணியம், கடந்த 10 ஆண்டுகளில் வாரத்துக்கு 2 கல்லூரிகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகம் என திறக்கப்பட்டாலும், மாணவர்களின் தேவைக்கு ஏற்ப இல்லை என்றும் கூறினார். டிஜிட்டல் உலகில் இந்தியா மிகப்பெரிய ஆய்வகமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.