< Back
தேசிய செய்திகள்
எல்லையில் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது என்ற அரசை இந்தியா கொண்டுள்ளது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

எல்லையில் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது என்ற அரசை இந்தியா கொண்டுள்ளது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
31 Oct 2024 8:40 PM IST

நம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கட்ச் பகுதியில் மறக்க முடியாத தீபாவளியை கொண்டாடினேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கட்ச்,

குஜராத்தின் கட்ச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதன்பின்னர், ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய கையால் இனிப்புகளை ஊட்டி விட்டார்.

இதன்பின்னர் வீரர்களின் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, முப்படைகளின் ஈடுஇணையற்ற தைரியம், தொடர்ந்து உறுதியுடன் இருக்கிற துணிச்சல் மற்றும் உறுதியான முடிவெடுத்தல் ஆகியவற்றை மக்கள் பார்க்கும்போது, அவர்கள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் அமைதி உறுதி செய்யப்பட்டு உள்ளது என உணர்கிறார்கள் என்றார்.

அன்னை இந்தியாவுக்கு சேவை செய்யும் உங்களுக்கும் மற்றும் ஒவ்வொரு வீரருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வாழ்த்தில், 140 கோடி மக்களின் நன்றியும் உள்ளது என்று கூறியுள்ளார்.

இமயமலையின் பனிப்பாறைகள் மற்றும் பூஜ்ய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலைகள், சில இடங்களில் குளிரான தட்பவெப்பம், சூரியன் மற்றும் அதன் வெப்ப தாக்கம் நிறைந்த சூடான பாலைவனங்கள் என எண்ணற்ற சவால்கள். இதுபோன்ற சூழல்களில் அசராமல் உள்ள வீரர்களை தோற்கடிக்க யாரால் முடியும் என எதிரிகளின் ஆன்மா கூட நினைத்துப்பார்க்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உங்களை பார்க்கும் உலகம், இந்தியாவின் ஆற்றலை பார்க்கிறது. உங்களை பகைவர்கள் பார்க்கும்போது, அவர்களிடம் உள்ள கெட்ட எண்ணங்கள் மறைவதனை அவர்கள் காண்கிறார்கள். உற்சாகத்தில் நீங்கள் முழங்கினால், பயங்கரவாதிகள் அலறுகிறார்கள். ஒவ்வொரு சவாலான சூழலிலும் வீரர்கள், அவர்களை நிரூபித்து இருக்கிறார்கள் என நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

இந்த உரையின்போது, குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவர் கட்சுக்கு பயணம் மேற்கொண்ட விசயங்களையும் நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, இதற்கு முன், இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடு என அறியப்பட்டது. ஆனால் இன்று, பல நாடுகளுக்கு பாதுகாப்பு சாதனங்களை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.

இன்று, எல்லை பகுதிகளில் ஓர் அங்குல நிலத்தில் கூட சமரசம் செய்வது என்பதே கிடையாது என்றவொரு அரசை இந்தியா கொண்டுள்ளது என்றும் பேசியுள்ளார். நம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கட்ச் பகுதியில் மறக்க முடியாத தீபாவளியை கொண்டாடினேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்