ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி - லாலு பிரசாத் யாதவ் நம்பிக்கை
|லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி தன்னை கடவுளின் தூதர் என பேசியதை குறிப்பிட்டு அவரை கேலி செய்தார்.
பாட்னா,
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் உயிரியல் (பயோலாஜிக்கல்) ரீதியாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள் தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்" என கூறினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி தன்னை கடவுளின் தூதர் என பேசியதை குறிப்பிட்டு அவரை கேலி செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மோடி அவரை 'அவதார்' (கடவுளின் தூதர்) என்று அழைக்கிறார். தான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை என்றும், தன்னை கடவுள் அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார். விரைவில் முடிவுகள் தெரியும். பிரதமர் மோடி தற்போது இல்லை. ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு நாங்கள் (இந்தியா கூட்டணி) அரசாங்கத்தை அமைப்போம்" என கூறினார்.
முன்னதாக லாலு பிரசாத் யாதவ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தும் பா.ஜனதா மற்றும் அதன் தலைவர்கள், அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி பேசுகிறார்கள். அரசியல் சட்டத்தை அம்பேத்கர் எழுதியிருப்பதால், மோடியும், அவரை சார்ந்தவர்களும் அரசியலமைப்பை வெறுக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.