மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்
|பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார்.
இந்த சூழலில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிரான "பாரபட்சமான பட்ஜெட்" என்று பல கட்சிகள் தெரிவித்திருந்தநிலையில், மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சியான இந்திய அணி கூட்டணி முடிவு செய்துள்ளது.
முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இரு மாநிலங்களைத் தவிர மக்களுக்கான பட்ஜெட் இது அல்ல என்றும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதன்படி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வாயிலில் தங்கள் போராட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.