< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
9 Dec 2024 11:29 AM IST

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. கனிமொழி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் தொடர்பான தீர்மான நோட்டீஸ்கள் மீது விவாதம் நடத்தக்கோரி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவையில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்