கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேருக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
|கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்புரா கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திருமண விழாவில் அதே பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருமண வீட்டார் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இதையடுத்து விருந்து சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவர்களை மீட்டு பெங்களூரு மற்றும் பாவகடா, இந்துப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே கிராமத்தில் 24 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது பற்றிய தகவல் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சென்று விசாரித்தனர்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமண வீட்டில் சாப்பிடுவதற்கு முன்னதாக கள்ளச்சாராயம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டதுடன் வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் எங்கிருந்து வாங்கினார்கள்? யார் விற்பனை செய்தார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.