சவாலில் வெற்றி பெற்றால் ஆட்டோ... நண்பர்களின் பேச்சால் நேர்ந்த விபரீதம்: வைரலான வீடியோ
|கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கும் சவாலில் வெற்றி பெற்றால், ஆட்டோ வாங்கி தருவோம் என குடிபோதையில் இருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கொன்னனாகுந்தி பகுதியில் நண்பர்கள் சிலர் நன்றாக குடித்து விட்டு, தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாட தயாரானார்கள்.
அப்போது, அவர்களில் சபரீஷ் என்ற நபரை நோக்கி சக நண்பர்கள் ஒரு சவால் விட்டனர். இதன்படி பட்டாசுகள் அடங்கிய பெட்டியை கீழே வைத்தனர். அதன் மீது அவர் அமர வேண்டும். பட்டாசை பற்ற வைத்து, வெடிக்க செய்யும்போது பயப்படாமல், அசராமல் அமர்ந்திருக்க வேண்டும்.
சவாலில் அவர் வெற்றி பெற்றால், நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து பணம் போட்டு, ஆட்டோ வாங்கி கொடுக்கப்படும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், பட்டாசு பெட்டி மீது சபரீஷ் அமர்ந்திருந்தபோது, சக நண்பர்கள் பட்டாசை வெடிக்க செய்து விட்டு, பாதுகாப்புக்காக தப்பியோடினர்.
சபரீஷ் பட்டாசு வெடிப்பதற்காக காத்திருந்து அமர்ந்திருக்கிறார். சில வினாடிகள் கடந்த பின்பு, அந்த பட்டாசு பெட்டி வெடித்ததும், கீழே சரிந்து விட்டார். புகையின் நடுவே, நண்பர்கள் ஓடி வந்து சபரீஷை பார்க்கின்றனர். அதிர்ச்சியில் விழுந்து விட்டாரா? அல்லது படுகாயம் அடைந்து சரிந்து விழுந்து விட்டாரா? என்பது தெரியவில்லை.
இதன்பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபரீஷின் நண்பர்கள் 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.