'நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்' - திருமாவளவன்
|நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்று வரும் அரசியலமைப்பு சாசனம் மீதான விவாதத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது;-
"அரசியல் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்டோம், ஆனால் சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் கேள்விக்குறியாக நிற்கிறது என டாக்டர் அம்பேத்கர் கூறினார். சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் இங்கே நடைமுறைக்கு வராது. சமத்துவம் இல்லாமல் சுதந்திரமும், சகோதரத்துவமும் இங்கே வெற்றிகரமாக இயங்காது. எனவே, இவற்றை தனித்தனியாக பிரித்துவிட முடியாது.
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும்போதுதான் இங்கே சமூக ஜனநாயகத்தை நாம் உருவாக்க முடியும் என அம்பேத்கர் கூறுகிறார். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை பெற வேண்டும். இது தேசம் என்ற ஒற்றை வடிவத்தை இன்னும் பெறவில்லை. நாம் அனைவரும் ஒரு தேசிய இனம் என்று கூட சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலையில், சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்க அம்பேத்கர் பல்வேறு யோசனைகளை சொன்ன அதே வேளையில், தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கே எதிர்காலத்தில் வர இருப்பவர்கள், நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும். இந்த தேசத்தின் சுதந்திரத்தை நாம் மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் என்ற கவலையை அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
75 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்க தரிசனமாக அம்பேத்கரால் உணர முடிந்திருக்கிறது. மத நம்பிக்கை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால் நாட்டை விட மத நம்பிக்கையே மேலானது என்ற நிலையை அவர்கள் உறுதிப்படுத்தக் கூடும் என்று அம்பேத்கர் சொன்னது இப்போது நடைமுறையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது."
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.