தினமும் ரூ. 3 கோடி செலவு செய்தாலும்...முகேஷ் அம்பானியின் சொத்து காலியாக இத்தனை ஆண்டுகள் ஆகுமா?
|முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாகும்.
மும்பை,
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி இன்று தொடங்கி 14-ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. மூன்று நாள் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தநிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு. 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
ஆரம்பம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் ஒருபக்கம் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என செலவழித்தால் அவருடைய சொத்தை எத்தனை ஆண்டுகளில் காலியாகும் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது முகேஷ் அம்பானி தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், 3,40,379 நாட்களில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் தீர்ந்துவிடும். இந்த கணக்கை ஆண்டுகளாக மாற்றினால், முகேஷ் அம்பானி ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், அவரது சொத்துக்கள் தீர 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் முகேஷ் அம்பானியின் 12 தலைமுறைகள் ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 கோடிசெலவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.