பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
|பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்- அரியானா எல்லையில் உள்ள கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பஞ்சாபில் விவசாயிகள் பல நாட்களாக தர்ணா மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொண்டது, ஆனால் இதுவரை அமல்படுத்தவில்லை. பாஜக அரசு இப்போது வாக்குறுதியை மீறிவிட்டது. பாஜக அரசு விவசாயிகளிடம் பேசவே இல்லை. அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் நம் நாட்டின் விவசாயிகள். யாரிடமும் பேசக்கூடாத அளவுக்கு பா.ஜ.க.வுக்கு ஏன் இவ்வளவு ஆணவம் இருக்கிறது?
பஞ்சாபில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கடவுள் காப்பாற்றட்டும், ஆனால் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தகவலுக்காக ஒன்றை சொல்ல விருப்புகிறேன் விவசாயிகளின் போராட்டத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு திரும்பப் பெற்ற மூன்று கறுப்புச் சட்டங்களை பின்வாசல் வழியாக மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த கொள்கையின் நகலை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி அவர்களின் கருத்துக்களை அறிந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.