இந்து அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குரூப்: சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
|கேரளாவில் வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் என குழு உருவாக்கிய விவகாரத்தில் இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்,
தீபாவளி அன்று, கேரளாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரின் வாட்ஸ் அப் செயலியில், ' ஹிந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ' என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த குழுவில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர். மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும்
அப்படி இருக்கையில் மத ரீதியில் பெயர் கொண்ட 'வாட்ஸ் அப் குரூப்' ல் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்த அவர், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்தது. எனது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனக்கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.