பஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு
|கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதாராபாத்,
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கரீம்நகரில் பஸ் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த 16-ந் தேதி குமாரி என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் பத்ராசலம் செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக இந்த பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த மாநில போக்குவரத்து கழக ஊழியர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து கழக பெண் ஊழியர்கள் பஸ்நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
இதில் குமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து தாயும், குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கரீம்நகர் பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.