ஜார்கண்ட் தேர்தல்.. வாக்குப்பதிவுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் அராஜகம்.. 5 லாரிகளுக்கு தீவைப்பு
|பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை நிலக்கரி போக்குவரத்தை தடுப்பதாக மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 38 தொகுதிகளில் உள்ள 14,218 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே மாவோயிஸ்டுகள் வன்முறை தாக்குதலை நடத்தி உள்ளனர். லதேஹர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் (1.30 மணி) 5 நிலக்கரி லாரிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். சுமார் 12 மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தி, லாரிகளை மறித்ததாகவும், பின்னர் டிரைவர்களை கீழே இறக்கிவிட்டு லாரிகளை கொளுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹெர்ஹஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாத் வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலக்கரியை கொட்டிவிட்டு திரும்பி வந்த லாரிகளை ஜார்கண்ட் பிரஸ்துதி கமிட்டி என்ற மாவோயிஸ்டு அமைப்பினர் வழிமறித்து தீ வைத்து எரித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
தாக்குதல் நடந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் ஒரு துண்டுப் பிரசுரத்தை விட்டுச் சென்றுள்ளனர். அதில் தங்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை நிலக்கரி போக்குவரத்தை தடுத்து நிறுத்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர்' என்றார்.