
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக் கொள்கையில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று கூறிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், மும்மொழிக்கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? எனவும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு திமுக, அதிமுக, தவெக உட்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக மேலும் கூறியதாவது;
"புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டின் மீது இந்தி மொழியை திணிக்கவில்லை. தாய் மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழி, பிற இந்திய மொழிகளின் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்.
மும்மொழிக் கொள்கையை தவறாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சிலர் அரசியல் செய்கின்றனர். தேசிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ் மொழி பழமையானது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பல மொழிகளை கற்றுக்கொண்டால் என்ன தவறு? தேசிய கல்விக்கொள்கை பிரதமரின் கனவு திட்டம். இதனை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.