< Back
தேசிய செய்திகள்
மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?
தேசிய செய்திகள்

மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

தினத்தந்தி
|
11 Aug 2024 6:14 AM GMT

எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று செபி தலைவர் மாதபி புச் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. எனினும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் நேற்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் மாதபி புச்-க்கு சொந்தமான பங்குகள் இருந்தன. முறைகேட்டில் உடந்தையாக இருந்ததால் அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹிண்டர்ன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவில் கார்ப்பரேட் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பணியிலுள்ள ஒழுங்குமுறை அமைப்பின் தலைவரே முறைகேட்டில் ஈடுபடுவதா..? என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.

இதனிடையே இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, செபி தலைவர் மாதபி புச் மற்றும் தவல் புச் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உள்ளீடுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். அதில் எந்த உண்மையும் இல்லை. எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது. தேவையான அனைத்து வெளிப்பாடுகளும் ஏற்கனவே செபி-க்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று விளக்கமளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடிவரை நிதி இழப்பு ஏற்பட்டநிலையில், நேற்று வெளியான புதிய அறிக்கை இந்திய பங்குச்சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாளை தெரிய வரும்.

அதானி பங்குகளில் செபி தலைவர் மாதாபி புச் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டன்பெர்க் புது அறிக்கையை வெளியிட்டிருந்தநிலையில், செபி இந்தியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தை protected mode-க்கு மாற்றியதால் சமூக வலைதள பயனர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்