
இமயமலையா?...பிரதமரின் கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த பவன் கல்யாண்

டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் சிரித்து பேசினார்.
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியாக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். முதல் மந்திரியுடன் 6 மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கு காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசினார்.
இதுகுறித்து பவன் கல்யாணிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து 'என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?' என பிரதமர் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு நான் 'இல்லை' என்றேன். பிறகு அவர், அங்கு செல்ல இன்னும் வயது இருக்கிறது. மக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார்" என்று பவன் கல்யாண் கூறினார்.