மீண்டும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஆகிறாரா ஹேமந்த் சோரன்?
|முதல்-மந்திரி சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டு சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரசாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதல்-மந்திரியாக உள்ள சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முறைப்படி முதல்-மந்திரியாக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதல்-மந்திரி சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.