< Back
தேசிய செய்திகள்
கேதர்நாத் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - பழுதுபார்க்க தூக்கிச் சென்றபோது விபத்து
தேசிய செய்திகள்

கேதர்நாத் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - பழுதுபார்க்க தூக்கிச் சென்றபோது விபத்து

தினத்தந்தி
|
31 Aug 2024 11:47 AM IST

கேதர்நாத் அருகே கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே மலைப்பகுதியில் உள்ள இறங்குதளத்தில் கடந்த மே மாதம் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரை பழுதுபார்ப்பதற்காக கச்சார் விமான தளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதையடுத்து, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம், பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. அப்போது ஹெலிகாப்டரை தூக்கிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு நடுவானில் திடீரென அறுந்தது.

இதனால் பழுதடைந்த ஹெலிகாப்டர் மந்தாகினி நதி அருகே உள்ள லின்சோலி என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த ஹெலிகாப்டரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


மேலும் செய்திகள்