கர்நாடகாவில் கனமழை, நிலச்சரிவு; 4 பேர் பலி
|கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 பேரை இன்னும் காணவில்லை.
பெங்களூரு,
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கோலா தாலுகாவுக்கு உட்பட்ட ஷிரூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி உத்தர கன்னடா காவல் துணை ஆணையாளர் லட்சுமி பிரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஷிரூர் கிராம பகுதியில் தேநீர் கடை ஒன்று இருந்தது. அதனுடன் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் முதியவர் ஒருவர் என 5 பேர் ஒன்றாக இருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த பகுதியில் 2 வீடுகள் இருந்தன. அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனால், இந்த 6 பேருடன் எரிவாயு லாரிகளில் இருந்த ஓட்டுநர் ஒருவரும் காணாமல் போயுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த 7 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 பேரை இன்னும் காணவில்லை என கூறியுள்ளார். 24 முதல் 48 மணிநேரத்தில் நிலைமை சீராகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலச்சரிவை தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணிகள் நடந்தன. காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நடந்து வருகின்றன.