கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
|கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு மிகவும் தீவிரமடைந்ததால் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த வாரத்தில் இருந்தே லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது.
தமிழகத்தில் அருகே உள்ள புதுச்சேரியிலும் மழையின் பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் பேரிடர் மீட்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.