கோடை வெயில்: இந்த ஆண்டு 374 பேர் பலி: மத்திய அரசு
|உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 52 பேர் பலியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப அலை வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. வட மாநிலங்களிலும் இயல்பான அளவை விட மிக மிக அதிகமாக வெப்பம் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்த சோக நிகழ்வும் நடந்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் முதல் ஜூலை வரையிலான காலத்தில் வெயிலுக்கு 374 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா படேல் கூறியதாவது:-
கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஜூலை 27-ந் தேதி வரை வெயிலால் உண்டாகும் வெப்ப வாதத்தால் 374 பேர் பலியாகி உள்ளனர். மாநில அரசுகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இதை கணக்கிட்டுள்ளோம். 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் வெப்ப வாதத்தால் 52 பேர் பலியாகி உள்ளனர். வெயில் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது"இவ்வாறு அவர் கூறினார்.