'அருகே வந்து கத்தினார்..' - ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
|ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பாஜக பெண் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின்போது ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பாஜக பெண் எம்.பி. பான்ங்னான் கோன்யான் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி எனது அருகில் வந்து கத்தினார். மேலும், அவர் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், ஒரு பெண் உறுப்பினராக நான் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் கனத்த இதயத்துடன் அங்கிருந்து விலகிச் சென்றேன். பழங்குடியின பெண்ணான எனக்கு நீங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.