< Back
தேசிய செய்திகள்
ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
10 July 2024 3:14 AM GMT

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ந்தேதி சாமியார் போலே பாபா பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள்.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டும், பொதுமக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தும் அறிக்கையை தயாரித்து உள்ளனர்.இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகமே இந்த பயங்கர சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழுவினரின் அறிக்கையின் அடிப்படையில் 6 அதிகாரிகளை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக துணை மண்டல அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

எண்ணற்ற பக்தர்களை அழைத்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதற்காக போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும், பல்வேறு உண்மையை மறைத்து அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள விசாரணைக்குழுவினர், நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆய்வு செய்யாமலே அதிகாரிகளும் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அதேநேரம் இந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என்பதையும் மறுக்காத விசாரணைக்குழுவினர், அது குறித்து ஆழமான விசாரணை நடத்தவும் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கிடையே ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் 5 நபர் நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த வக்கீல் விஷால் திவாரி நேற்று தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி, அந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு நேற்றே (நேற்று முன்தினம்) தான் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இதன் மூலம் அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்