அரியானா தேர்தல்: முதியோர் உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
|அரியானா தேர்தலை முன்னிட்டு 7 முக்கிய அம்சங்கள் கொண்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், அரியானா சட்டசபை தேர்தலையொட்டி வாக்குறுதி பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000 வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி 7 வாக்குறுதிகளை அளித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த 7 வாக்குறுதிகளை நாங்கள் செயல்படுத்துவோம். இந்த ஏழு உத்தரவாதங்களைத் தவிர, எங்கள் கட்சியின் 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து சண்டிகாரில் விரிவாக விளக்கப்படும் என்று கூறினார்.