மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராதது - உத்தவ் தாக்கரே
|மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரே அதிர்ச்சியும், ஏமாற்றமும் தெரிவித்தார்,
மும்பை,
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷின்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாயுதி கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. மறுபுறம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் களமிறங்கின.
இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை கண்டது. சுமார் 95 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த தேர்தல் முடிவு யார் உண்மையான சிவசேனா என்பதை நிரூபித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சியும், ஏமாற்றமும் தெரிவித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராதது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது. இதற்கு பின்னால் ஏதோ மர்மம் உள்ளது. இதனை ஏற்றுக்கொள்வது கடினம். தொடர்ந்து போராடுவேன்" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.